~~முந்தைய பதிவை/படங்களை மீண்டுமொருமுறை பார்த்துக்கொள்ளவும்.~~
இப்படித்தான் ஆரம்பித்தது
2010 இறுதியில் துனிஷியாவில்
ஆரம்பித்து சில இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்ட சர்வாதிகார அரசுகளுக்கேதிரான புரட்சி, 2011 தொடக்கத்தில் சிரியாவிலும் பரவி அதிபர் அஸாத்தை எதிர்த்து அங்காங்கே போராட்டங்கள்
வெடித்தன. 2011 மார்ச் மாதத்தில் (Daraa) தேரா என்ற சிறுநகரத்துப்
பள்ளிச் சுவரில் "As-Shaab / Yoreed / Eskaat el nizam!" :
"The people / want / the downfall of the regime!”: "மக்கள் இந்த ஆட்சி முடியவேண்டுமென்கிறார்கள்!" என்று எழுதிவைக்க, பதினைந்து சிறுவர்கள் கைது
செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்குள்ளாகின்றனர். இதை
எதிர்த்து அந்நகர மக்கள் கிளர்ச்சி செய்ய, அரசப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 4-6 பேர் பலியாகினர். தலைநகர் டமாஸ்கஸிலும் போராட்டம் நடந்தது. போராட்டங்கள்
மேலும் பரவுவதை தடுக்க அஸாத்தின் உத்தரவின் பேரில் பதினைந்து சிறார்களும் விடுவிக்கப்படுகின்றனர்.
மக்கள் மேலும் சில கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், அவை
நிர்வாகச் சீர்திருத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, 1963 தொடங்கி அச்சமயம் வரை அமலில் இருந்த அவசர நிலையை திரும்பப்பெறுவது
போன்றவை..
2011 ஏப்ரலில் 47 வருட அவசர நிலை விலக்கப்பட்டு, அரசியல் கைதிகள்
சிலர் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் மேலும் பல
நகரங்களுக்கு பரவ, நிலைமையைச் சமாளிக்க
இராணுவம் வரவழைக்கப்பட்டு மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. எதிர்ப்பாளர்கள்
ஆயுதச்சண்டைக்கு தயாராகினர். அதே மாத இறுதியில் சிரிய
அகதிகளின் முதல் குழு எல்லை தாண்டி துருக்கியில்
தஞ்சமடைந்தன. சிலர் லெபனான் சென்றனர்.
அஸாத்தை எதிர்க்க கிளர்ச்சியாளர்கள்
சேர்ந்து ஆரம்பித்த “சிரிய விடுதலை இராணுவம்” என்ற அமைப்பை அங்கீகரித்து மேற்கத்திய மற்றும் சவூதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு
நாடுகள் பயிற்சியளித்தன. நகரங்களுக்குள் இராணுவ
டாங்கிகள் புகுந்த நிலையில், மேற்குலக நாடுகள் பல்வேறு
காரணங்களுக்காக ஏற்கனவே சிரியா மீது விதித்திருந்த பொருளாதாரத்தடைகளை மேலும்
தீவிரமாக்கின. நவம்பரில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இருந்து சிரியா
நீக்கப்பட்டது. அசாத் பதவி
விலகக்கோரி சர்வதேச நெருக்குதல் அதிகமானது.
ஐநா
2011 அக்டோபரில் ஐநா பாதுகாப்பு சபை (6
members security council) சிரிய அதிபருக்கு எதிராக கொண்டு
வந்த கண்டன தீர்மானத்தை, விட்டோ அதிகாரத்தைப்பயன்படுத்தி
ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்றவிடவில்லை.
2012 பிப்ரவரியில் ஐநா பாதுகாப்பு
சபை அஸாத் பதவி விலக கோரி
கொண்டு வந்த தீர்மானத்தை,மீண்டும் விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன. இது மாதிரியான 4 பாதுகாப்புச்சபை
தீர்மானங்களை ரஷ்யாவும், சீனாவும் ரத்து செய்துள்ளன.
இதனால் பொது சபையில் (All Members General Assembly) ஆஸாத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்து தீர்மானங்கள்
நிறைவேற்றப்படுகின்றன..
|
அதிபர் அஸாத் |
இதற்கிடையில் தன் பதவியை உறுதி செய்து
கொள்ள ஆஸாத்தின் அரசியல் சட்டத்திருத்த பொது வாக்கெடுப்பு பரவலான வன்முறையால்
தோல்வியில் முடிந்து சிரிய விடுதலை இராணுவதிற்கும் அரசப் படைகளுக்குமான சண்டை தீவிரமடைந்தது.
சண்டையை நிறுத்த ஐக்கிய நாடுகள்
மற்றும் அரபு கூட்டமைப்புப் பிரதிநிதியாக
முன்னாள் ஐநா போது செயலாளர் 'கோபி அனான்' நியமிக்கப்படுகிறார், ஆறு அம்ச அமைதி திட்டம்
ரஷ்யா – சீனா ஒப்புதலைப் பெறும்வகையில் தயாரானது. மே மாதம் சிரியா சென்று அஸாத்தை சந்திக்கும் கோபி
அனான், ஆகஸ்ட்டில் ஐநா பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஆஸாத், அமைதி திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று கூறி தன்
பொறுப்பைத் துறக்கிறார்.
கோபி அனானுக்குப் பதில் 'லக்தர் பிரஹிமி' என்ற அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த வெளிவிவகார
நிபுணர் வருகிறார். 2012 ஆகஸ்ட் தொடங்கி 2014 மே வரை ஜெனிவாவில் சிரிய அரசுத்தரப்பு மற்றும் எதிர்ப்பாளர்களை நேருக்கு
நேர் பேச வைத்து தற்காலிகச் சண்டை நிறுத்தத்திற்கு
முயன்றார், ரஷ்யா, அமெரிக்கா, ஈரான் மற்றும் அரபு நாடுகளின் உதவியைக் கோரினார்.
பெய்ஜிங் சென்று சீன வெளி விவகாரத்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினார். எந்த முன்னேற்றமும்
ஏற்படவில்லை. ஜூன் 2014-ல் ஆஸாத் பிடிவாதமாக மீண்டும் அதிபர் தேர்தலில்
போட்டியிடபோவதாக அறிவிக்க,தேர்ந்த ராஜதந்திரி என்று
அறியப்பட்ட பிரஹிமி பதவி விலகி, சிரிய மக்களிடம்
மன்னிப்புக் கோருகிறார்..
(சண்டையின் இடையே சிரியாவில் அரசு
வசமிருந்த ஆபத்தான இரசாயன ஆயுதங்களை அழிக்க ஐநா
களமிறங்கியது. தற்போது பல்வேறு நாடுகளில் உள்ள சிரிய
அகதிகளின் மறுகுடியேற்றத்தில் UNHCR தீவிரமாக ஈடுபட்டுள்ளது.)
இதற்கிடையில் “சிரிய விடுதலை இராணுவ” படைகளுக்கு தரப்பட்ட
ஆயுதம் மற்றும் தளவாட உதவிகளைக் கைப்பற்றி, அல் நுஸ்ரா (அல்காயிதவின் சிரிய கிளை), 2011 ஜூலையில்
இராக்கிலிருந்து வந்த ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் வலுப்பெற்றதாக ஒரு கருத்து உண்டு. ஆனால் பூதாகரமாக
உருவெடுத்துள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு முழுக்க முழுக்க அமெரிக்கா மற்றும் சவூதி
போன்ற சன்னி முஸ்லிம் நாடுகளின் வார்ப்பு. “சிரிய
விடுதலை இராணுவத்தினரை” விட அதிக ஆயுதங்கள் ஐஎஸ்-க்கு கிடைத்தன. தொடக்கத்தில் ரகசியமாக ஐஎஸ்-க்கு அமெரிக்கா - சவூதியும், தற்போது
அல்-நுஸ்ரா மற்றும் பிற கிளர்ச்சி குழுக்களுக்கு, சவூதி, கத்தார், UAE போன்ற பணக்கார சன்னி
முஸ்லிம் நாடுகளும் உதவுகின்றன. அஸாத்தை எதிர்க்கும் முக்கிய முத்தரப்பான சிரிய
விடுதலை ராணுவம்(புரட்சி படையினர்) – ஐஎஸ் – அல்நுஸ்ரா போன்றவை தங்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாவது
தனிக்கதை, இவர்களில் ஐஎஸ்-ன் கையே தற்போது
ஓங்கியுள்ளது.
ரஷ்யா vs அமெரிக்கா
ஆரம்பத்தில் அஸாத்
துனிஷியாவின் பென் அலி போல பதவி விலகுவான் அல்லது
சதாம்,கடாபி போல விழ்ந்து விடுவான் என்றே
எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யாவின் இடைவிடாத ஆயுத சப்ளையும், அஸாத்தை காப்பாற்ற இரான் தன் பங்குக்கு ஷியா கூலிப்படையினரையும், லேபனானின் ஹிஸ்புல்லா(ஷியா) போன்ற தீவிரவாதக்குழுக்களையும், ரகசியமாக இராக் வழியாக தன் படைகளையும் களத்தில்
இறக்கி விட்டுள்ளது. தற்போது ISISக்கு எதிரான தாக்குதல்
என்ற பெயரில் ரஷ்ய படைகள் களமிறங்கி மிச்சமிருக்கும்
அப்பாவி மக்களின் மீதும் சேர்த்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை
வீசிக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவுக்கு உள்ள இரு முக்கிய நோக்கங்கள், முடிந்தவரை அஸாத்தைக் காப்பாற்றுவது மற்றும் இராணுவ பலத்தை பறைசாற்றி இந்தத் தாக்குதலில் பயன்படுத்தும் போர் விமானம்
உட்பட பல்வேறு விதமான ஆயுதங்களுக்கான உலகளாவிய சந்தைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுமே.
அமெரிக்காவுக்குச் சமமாக தன் பலத்தைக் காட்டிக்கொள்ளும் அதிபர் புடினின் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
பக்கத்து நாடான சிரியாவில் ரஷ்யாவின் நேரடி தலையீட்டை பார்த்து எரிச்சலடைந்த
வட்டார தாதா துருக்கி, தங்கள் எல்லையில் பறந்ததாகக் கூறி ரஷ்ய விமானத்தை சுட்டு விழ்த்தியது நினைவிருக்கலாம்.
முதலில் எந்த
நிலைபாட்டையும் எடுக்காத ஒபாமாவின் அமெரிக்கா தன் வழக்கமான பாரம்பர்யபடி ஐஸ்
தீவிரவாதிகளை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தது. (ஐஸ் தலைவர்கள் என்று
சந்தேகிக்கபடும் நபர்களை ஹில்லாரி, ஜான்
மெக்கெயின் போன்றவர்கள் சந்தித்தாக படங்கள் கூட வெளியாகின). இடையில் அஸாத் இரசாயன
ஆயுதங்கள் WMD வைத்திருப்பதாக செய்திகள் வெளியாக. சிரியா மீது நேரடி போர் தொடுக்கப் போவதாக
அமெரிக்கா மிரட்ட, ரசாயன ஆயுதங்களை மட்டும் அழிக்க ஐநா
குழுவை உள்ளே அனுமதிக்க அஸாத் ஒப்புக்கொள்ள. சமீபத்தில் சிரியாவில் அரசு வசமிருந்த
அனைத்து இரசாயன ஆயுதங்களும் அழிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போது இராக்கில் ஐஸ் மீதான தாக்குதல்களை அமெரிக்கா முன்னின்று நடத்துகிறது.
சன்னி vs ஷியா
கிபி 632 ல் இறைத்தூதர் என்றழைக்கப்பட்ட நபிகள் மறைவுக்குப்பின் அவரின் தந்தை வழி
சகோதரி மகனும் மருமகனுமான அலி என்பவர் முதல் கலீபாவாக வேண்டும் என்று சிலர்
விரும்பினர். ((கலிபா (caliph) என்பவர்
இஸ்லாமியர்களை மார்க்க ரீதியாக வழி நடத்தும் தலைவர், இவர்கள்
அதிகாரம் செலுத்தும் பகுதி caliphate என்றழைக்கப்படும்)) ஆனால் நபிகளின் மறைவைத் தொடர்ந்து முதல்
கலீபாவாக பதவிக்கு வந்தவர் அவரின் நம்பிக்கைக்குரியவரும்,மாமனாருமான ’அபு பக்கர்’ என்பவர்.
வயது மூப்பின் காரணமாக இவர் இறந்த பின் வந்த (நபிகளின் சொந்தமில்லாத) இரு
கலிபாக்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இப்போது மருமகன் அலியே கலீபாவாக பொறுப்பேற்றார். ஆனால் இவரும் கொல்லப்பட
இவரின் மகன் ஹுசைன் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹுசைனும் குடும்பத்தோடு
கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். ஹுசைனின்
மரணத்திற்கு ஷியா முஸ்லிம்கள் துக்கம் அனுஷ்டிக்கும் நாளே மொஹரம், இவர்களைப் பொறுத்தவரையில் இறைவனால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நபிகளின் நேரடி ரத்த உறவுகளே கலிபாக்கள்.
நபிகளின் நேரடி ரத்த
சொந்தமில்லாத, ஆனால் தகுதியுள்ளவர்கள் என கருதப்பட்ட முதல் முன்று கலீபாக்களையும்
ஏற்றுக்கொண்டவர்கள் சன்னி பிரிவாக மாறினர்.
மேற்சொன்ன
நிகழ்வுகளுக்குள் நடந்த பல கொலைகளும் துரோகங்களும், அதன்
பின் யார் கலீபா பதவியை பிடிப்பது என்ற பல்வேறு இஸ்லாமிய இனக்குழுக்களிடையே நடந்த
ரத்தக்களரிகளும், கடந்த 1300 வருடங்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவரை வேறுபடுத்திக் காட்ட மேலும் தீவிரமாக்கப்பட்ட இஸ்லாமிய கொள்கைகளும், அதை ஒருவர் மேல் ஒருவர் மேல் திணிப்பதற்கான இவர்களின் புனிதப் போரும் தற்போதுவரை தொடர்கின்றன.
இதற்கும் மேலே, நபிகளின் பொன்மொழிகள் எனப்படும் ஹதித் என்ற தொகுப்பில், முஸ்லிம்கள் 73 பிரிவாக சிதறுவார்கள் என்றும்
அதில் ஒரு பிரிவைத் தவிர மற்ற அனைவரும் நரகத்தில்
தள்ளப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட, சொர்க்கத்தை
அடையும் உண்மையான இஸ்லாமியர்கள் தாங்கள்தான் என்ற மோதலும் ஷியா-சன்னியிடையே
உள்ளது.
இரு தரப்பினரும்
ஒன்றினையும் விஷயங்கள் குரான் மற்றும் ஐந்து மார்க்க கடமைகளான ஓரிறைக்கொள்கை, மெக்கா பயணம், ஐந்து வேலை தொழுகை,எளியவர்களுக்கு உதவுதல், ரம்ஜான் நோன்பு
போன்றவை.
சவூதி vs இரான்
மனித உரிமைகளுக்கு பெயர்
போன சவுதியை பற்றி நிறையவே படித்திருப்போம். மெக்கா
- மதீனா புனிதத் தலங்களை
கொண்ட 95% சன்னி பிரிவு மக்கள் நிறைந்த,வாஹபிசம் என்ற(Wahhabism) இஸ்லாமின்
கடும்கோட்பாட்டை பின்பற்றி, எண்ணெய் விற்ற காசில்
அல்-காயிதா, தாலிபான், லஷ்கர், சமீபத்திய ஐஎஸ் வரை பல
வகையான சன்னி பிரிவு தீவிரவாத குழுக்களை வளர்த்து விட்ட, உலகம் முழுவதுமுள்ள பெரும்பான்மையான சன்னி முஸ்லிம் மக்களை மத ரீதியாக
ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சர்வாதிகார மன்னராட்சி நாடு சவூதி, இதன் கூட்டாளிகள் சக சன்னி முஸ்லிம் நாடுகள்.
1979 வரை
சவூதிக்கு 95% ஷியா மக்களை கொண்ட ஈரான் ஒரு
பிரச்சனையாக இல்லை, அதுவரை இரானை ஆண்ட அமெரிக்காவின்
கைக்கூலியான மன்னராட்சியை புரட்சியின் முலம் ஒழித்து ஷியா பிரிவு மத குருமார்களின் (Ayatollah) தலைமையின் கீழ் இரான் வந்தது. ((ஏற்கனவே அரேபிய தேசியவாதம், எண்ணெய்
வர்த்தகப் போட்டியால் ஆட்டம் கண்டிருந்த நிலையில், இரானியப் புரட்சி அதுவரை ஓரளவு ஒற்றுமையாக
இருந்த மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பிரிவினை அரசியலை மேலும் ஆழமாக்கியது))
வெற்றிகரமாக நிகழ்ந்த இந்தப் புரட்சியை மற்ற முஸ்லிம்
தேசங்களுக்கும் இரான் பரப்ப முயல, இதனால் அச்சமுற்ற
சவூதி மற்றும் இன்னபிற சன்னி முஸ்லிம் நாடுகள், 1980ல்
இராக்கின் சதாம் ஹுசைன் இரான் மீது தொடுத்த போரை ஆதரித்தன. இரானில் இருந்த தனக்கு ஆதரவான அரசைக் கவிழ்த்தற்கு பழிவாங்க
அமெரிக்காவும் சதாமுக்கு பெருமளவில் ஆயுதங்களை சப்ளை
செய்தது. சவுதியைப் போலவே சதாமும் இரானியப் புரட்சியைக்கண்டு அதிகம் பயந்தார், காரணம்
பெரும்பான்மை ஷியா மக்கள் இருந்த இராக்கை சிறுபான்மை சன்னி பிரிவை சேர்ந்த சதாம்
துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். (2003 அமெரிக்க தாக்குதலில் சதாம் பதவியிழக்கும் வரை இது தொடர்ந்தது). 1980ல் தொடங்கி பல லட்சம் பேர் உயிரிழந்து நீண்டகாலம் நிகழ்ந்த இந்தப் போரை வெற்றிகரமாகச் சமாளித்த இரானில் சவுதி
மீதான வெறுப்பு மேலும் அதிகரித்தது. இதன் பொருட்டே இன்றுவரை அமெரிக்காவையும், சவுதியையும் இரானின் தலைவர்கள் கடுமையாக வசைபாடி வருகின்றனர். மெக்கா – மதீனாவை கொண்டுள்ள சவுதியை விட இஸ்லாமை அதிகம் முன்னிறுத்துவது தங்கள்தான்
என்று கூறிக்கொள்ளும் அந்நாட்டைக் கண்டு சவூதி மன்னர்கள் அஞ்சுவதில்
ஆச்சர்யமில்லை. இதன் உச்சமாக இரான் அணுகுண்டு தயாரிப்பதை நிறுத்தும் நோக்கில்,யூத ஆக்ரமிப்பு நாடான இஸ்ரேல் திட்டமிட்ட இரான் மீதான தாக்குதல்
நடவடிக்கைக்கும் ஆதரவளிக்க சவூதி முன்வந்தது. (சவூதி மற்றும் இஸ்ரேலின் கடும்
எதிர்ப்பையும் மீறி அணுசக்தி உடன்பாடு கையெழுத்தாகி இரான் மீதான பெரும்பாலான
வர்த்தகத் தடைகள் அண்மையில் நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்)
இரானை விட குறைவான மக்கள் தொகை கொண்ட, பெரிய அளவுக்கு தேசப்பற்றில்லாத சவுதி மக்களை
ஒன்றிணைப்பது எண்ணெய் வளத்தின் முலம் கிடக்கும் பணமே. இதனாலயே 2011ல் மத்திய கிழக்கில் பரவிய புரட்சியால் தொடர்ச்சியாக சவுதியில் உள்ள தன்
சிறுபான்மை பிரிவு மக்களுக்கு ஜனநாயக ரீதியிலான உரிமைகளை கேட்டு போராடிய ஷியா
மதகுருவிற்கு மரண தண்டனை (Jan-2-2016) கிடைத்தது. இரான்
இதற்கு பழிவாங்கப் போவதாக அறிவிக்க, சவூதி இரானுடனான தூதரக உறவை துண்டித்து கொண்டது, மேலும் பொருளாதார ரீதியாக பழிவாங்க, சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெயை இரானை விட குறைந்த விலையில் விற்க முயல்கிறது.
மற்றபடி
காட்டுமிராண்டித்தனமான ஷரியா சட்டங்களைப் பின்பற்றி
மக்களை வதைப்பதில் இரு நாடுகளுக்கும் வித்தியாசம் கிடையாது.
** இதில்
பாகிஸ்தானின் நிலைப்பாடு கவனிக்கப்பட வேண்டியது, சவூதி
மிக நெருங்கிய ((அணு ஆயுதம் தயாரிக்க நிதியுதவி செய்த)) நட்பு நாடு, இரானோ பக்கத்து நாடு. இதில் குறிப்பிடவேண்டியது (இரான்-சவூதி) போர் வரும்
பட்சத்தில் தேவைப்படும் சமயத்தில் பாகிஸ்தானிடமிருந்து அணுகுண்டை பெற்று இரானுக்கு எதிராகப்பயன்படுத்த வேண்டியே சவுதி
பாகிஸ்தான் அணு ஆயுதத் திட்டத்தை ஆதரித்தது.
பாகிஸ்தானின் அணுகுண்டுக்கு இன்னொரு செல்லப் பெயர் “இஸ்லாமிய குண்டு” Yes...!
The Great Islamic Bomb…! சமீபத்தில் நவாஸ்ஷெரீப்பும் பாகிஸ்தான் ராணுவத்தளபதியும் கூட்டாக இரு நாடுகளுக்கும் சென்று
மத்தியஸ்தம் செய்ய முயன்றனர்.
|
சவுதியில் வெளிநாட்டு தலைவர்கள் |
ஐஎஸ்
உருவான விதம்
சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் ஹுசைன் ஷியா பெரும்பான்மை கொண்ட நாடான இராக்கில் நடத்தி
வந்த சர்வாதிகாரம் 2003ல் தொடங்கிய அமெரிக்கத்தாக்குதலால்
முடிவுக்கு வர, அதுகாறும் அடங்கிக் கிடந்த ஷியா முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள்
சன்னி பிரிவினரை ஒடுக்க முயன்றனர். இதற்கு பதிலடியாக அல்காயிதா மற்றும் பிற சன்னி
தீவிரவாத அமைப்புகள் பல (அடிக்கடி செய்தியில் வரும் இராக்கிய கார் குண்டு
தாக்குதல் உட்பட) குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பழிவாங்கியது. அமெரிக்கத் தாக்குதலால் ஏற்கனவே நிலைகுலைந்து போன
இராக்கில், இவ்வகையான மோதலால் 2003 தொடங்கி இதுவரை 25 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஐஎஸ்-ன் முக்கிய தலைவர்கள்
முதலில் சந்தித்துக் கொண்டது இராக்கில் அமெரிக்கா
நடத்தி வந்த “Camp bucca”என்ற
சிறையில், நன்னடத்தை ! காரணமாக வெளியே வந்த ‘அபு பக்கர் அல்-பாக்தாதி’ மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு ஷியா பிரிவினரை குறிவைத்து தாக்குதல் நடத்த
துவங்கினான். இதற்கு தோல்வி வெறுப்பில் இருந்த சதாம் கட்சிப் பிரமுகர்களின் நிதி உதவியும், சதாமின் முன்னாள்
இராணுவத்தினரின் வியூக ஆலோசனையும் கிடைத்தன. சிரியாவில் பிரச்சனை தொடங்கும் வரை
இவர்கள் ஐஎஸ் என்ற பெயரில்
இயங்கவில்லை. அஸாத்துக்கெதிராய் யார் கிளர்ச்சி செய்தாலும் அமெரிக்காவும், சவுதி இன்னபிற சன்னி நாடுகளும் வழங்கிய பெருமளவிலான பணம் மற்றும் ஆயுத, தளவாட உதவிகளே ஐஎஸ் என்ற அமைப்பாக இவர்கள் மாற காரணம்.
சன்னி தீவிரவாதிகளான ஐஎஸ்-ன் நோக்கம் காட்டுமிராண்டி ஷரியா விதிகளின் படி பரந்த இஸ்லாமிய
சாம்ராஜ்யத்தை (CALIPHATE) அமைப்பது, அதன் தலைமைப்பதவியான கலிபா பொறுப்பேற்பது யார் என்ற போட்டியும்
இவர்களுக்குள் உண்டு, ஐஎஸ்-ன் தற்போதைய தலைவன் ‘அபு பக்கர் அல்-பாக்தாதி’ இப்போது தன்னைத்தானே
கலீபாவாக அறிவித்துக் கொண்டுள்ளான்.
இந்தியாவில்
கிலாபத் இயக்கம். (Caliphate movement)
காந்தி
ஒரு காலத்தில் இந்த caliphate டை ஆதரித்தார், எப்படி தெரியுமா..!
1919 களில்
தொடங்கிய ஆயுதப் போராட்டத்தின் முலம் மக்கள் அதரவு
பெற்ற துருக்கிய தேசிய இயக்கத் தலைவரான சீர்த்திருத்தவாதி முஸ்தபா கமால் அப்போதைய கலிபாவான சர்வாதிகார ஓட்டோமன் பேரரசை
மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் விழ்த்தி ஆட்சியைப் பிடிக்கிறார்.
இது இந்தியாவில் இருக்கும் காந்திக்கு அலி சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட (ஷவ்கத்
அலி – முகமது
அலி) என்பவர்களால் உலகம் முழுவதற்குமான முஸ்லிம்களின் தலைவருக்கு பிரிட்டிஷாரால்
இழைக்கப்பட்ட அநீதியாக நம்ப வைக்கப்படுகிறது. துருக்கியர்களே வெறுத்த ஒட்டோமன்
சுல்தான்/கலிபா சாம்ராஜ்யத்தை இவர்கள் காந்தியின்
உதவியுடன் மீண்டும் ஏற்படுத்த முயன்றனர். வங்காளப் பிரிவினைக்கு
(Bengal partition) பிறகு இந்து-முஸ்லிம்களிடம்
இருந்த பரஸ்பர அவநம்பிக்கையைப் போக்க இதைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து விழ்ந்த இஸ்லாமிய அரசை துருக்கியில்
மீண்டும் ஏற்படுத்த கிலாபத் கமிட்டி என்ற குழுவுக்கு காந்தி
தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் துணையுடன் ஒத்துழையாமை இயக்கம்
ஆரம்பிக்கிறார். பிரிட்டிஷார் வெளியேற வேண்டி நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்த
போராட்டத்துடன் இதற்கும் சேர்த்து, அதாவது caliphateவேண்டி போராட்டம் நடந்தது. அப்போதைய இந்தியன் முஸ்லிம் லிக் விஷயம்
புரியாமல் இதை ஆதரித்ததாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர், அவசியமே இல்லாத கிலாபத் இயக்கம் கடைசியில் பெருந்தோல்வியைக் கண்டது. அங்கே முஸ்தபா கமால் துருக்கியை நவீன மதசார்பற்ற நாடாக மாற்ற, இங்கே அலி சகோதரர்கள் ஜின்னாவுடன் போய் சேர்ந்து கொண்டனர்.
காந்தி அகிம்சை வழியில்
அங்கே மீண்டும் நிறுவ முயன்ற இஸ்லாமிய ஆட்சியைத்தான் (Caliphate), இப்போது ஐஸ்
தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்து, உலகில் முஸ்லிம்கள் உள்ள எல்லா இடங்களையும் சேர்த்து மிகப் பரந்த இஸ்லாமிய பேரரசாக ஏற்படுத்த முயல்கின்றனர். நவீன தகவல் தொடர்பு அமைப்புகளை பயன்படுத்தி இஸ்லாமிய ஆட்சி என்று இவர்கள் முன்வைத்த சித்தாந்தத்தால் கவரப்பட்ட
ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் என இன்னும் பல நாடுகளின்
உள்ள சில முஸ்லிம்கள் (பெரும்பாலும் இளவயதினர்) இதில் இணைந்து கொண்டிருக்கின்றனர். பல
நாடுகளில் இப்போது ஐஎஸ் அமைப்பின் பெயரில் தாக்குதல்கள் தொடங்கி விட்டன.
ஈராக்கிய நகரங்களை
கைப்பற்றத் தொடங்கி சிரியாவில் புகுந்து, தற்போது “Caliphate” என்ற பெயரில் மேற்கத்திய, சவூதி
மற்றும் இன்னபிற முஸ்லிம் நாடுகளுக்கேதிராகவே ஐஎஸ் தற்போது திரும்பி விட்டது.
அகதிகள்
பிரச்சனை
ஐந்து வருடமாக மக்கள் மீது பலமுனை
தாக்குதல் நடக்கிறது.
*** கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து
விடக்கூடாதென்று இளைஞர்களையும், சன்னி முஸ்லிம்களையும்
தேடித் தேடி சிரிய அரசுப் படைகள்
படுகொலை செய்கிறது, இதற்கு லேபானானின் ஹிஸ்புல்லா (ஷியா) திவிரவாதிகள் உதவியும் உண்டு. சிரிய இராணுவம் மற்ற நகரங்களை அழித்து
விட்டு தலைநகர் டமாஸ்கஸ் மீதே விமானத் தாக்குதல்
நடத்துகிறது. இதுவரை உயிரிழந்துள்ள மக்களில் முக்கால்வாசி பேர் அரசப் படையினரால் கொல்லப்பட்டவர்கள். Barrel bombs, தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள், கொத்து
குண்டுகள், ஏவுகணைகள் வீசி
நாட்டின் அனைத்து நகரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது சிரியாவின் 70
% நிலம் ஆசாத்திடம் இல்லை.
*** அஸாத்துக்கு எதிரான போர் என்ற
பெயரில் ஷியா பிரிவினரை படுகொலை செய்கின்றனர் கிளர்ச்சியாளர்கள். (சிரிய விடுதலை
ராணுவம்)
*** இன்னொருபுறம் (சன்னி) தீவிரவாத
அமைப்பான ஐஎஸ் பொது மக்கள், கிளர்ச்சியாளர்கள், இராணுவம் என அனைவரையும் கொன்றுழிக்கிறது.
### உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய உதவி இல்லாமல் இறப்போர் ஒரு பக்கம்.
பல லட்சம் குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர், பெரும்பாலும்
பெண்கள், குழந்தைகள். இதில்
பட்டினியால் இறந்தவர்கள் 80 ஆயிரத்திற்கும் மேல். கல்வி, சுகாதார, மின்சார
கட்டமைப்புகள் நிலைகுலைந்து, சிறு பெரு நகரங்கள் அனைத்தும்
அழிக்கப்பட்டுவிட்டன.
சிரியாவே 2011 வரை அண்டை நாடுகளின் அகதிகளுக்கு அடைக்கலம் அளித்து வந்த மிக முக்கிய நாடு. UNHCR என்ற ஐநா அகதிகள் அமைப்பின்
தரவு படி 10 மில்லியன் சிரிய மக்கள் இடம்
பெயர்ந்துள்ளனர். இதில் 41 லட்சம் பதிவு
செய்யப்பட்ட அகதிகள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மனு செய்துள்ளவர்கள் 3.5 லட்சம் மக்கள்.
ஐரோப்பாவின் வலதுசாரி கட்சிகள் அகதிகள்
குடியேற்றத்தை எதிர்க்க, ஐரோப்பிய
அரசுகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வருகையால் திணறுகின்றன. இரக்கமுள்ள சிலர்
தங்கள் விடுகளில் இடமளிக்கின்றனர். பல தொண்டு நிறுவனங்கள் புதிதாக
ஏற்படுத்தப்பட்டு உணவு, உறைவிடம், உடைகள் போன்றவை அளிக்கப்படுகிறது. ஆனால் சில சிரிய
அகதிகள் (இது ஸ்வீடனில்) தங்களுக்கேன்று தனி இடம் (நிரந்தர குடியேற்றத்துக்கு)
கேட்டு பிரச்சனை செய்கின்றனர். ஜெர்மானிய அகதிகள் குடியிருப்பில் கோஷ்டிப்பூசல்களுக்கும், அடிதடிக்கும் பஞ்சமில்லை.
அகதிகளின் போர்வையில் ஐரோப்பாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பியுள்ளோம் என்று ஐஎஸ் எச்சரிக்கை விடுத்த ஒரே
மாதத்தில் பிரான்ஸ் தாக்குதல், பெய்ரூட் (லெபனான்) குண்டுவெடிப்பு நிகழ, ஐரோப்பாவை அடைய சில சிரியர்கள் மேற்கொள்ளும் வன்முறையான முயற்சிகள்
போன்றவை ஏற்கனவே உள்ள அகதிகளின் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
|
அகதிகளுடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடியோ |
தத்தமது நாட்டின் வலதுசாரி கட்சிகளின்
எதிர்ப்பை மீறி அகதிகளுக்கு புகலிடம் அளித்த சில ஐரோப்பியத் தலைவர்கள் இந்த நிகழ்வுகளால் இவர்கள் விஷயத்தில் கடுமை காட்ட
தொடங்கிவிட்டனர். சமீபத்திய உதாரணம் ஜெர்மனியின் கோலோன் நகரத்தில் நள்ளிரவு
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
அகதிகள் கும்பல் புகுந்து அங்கிருந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த, ஐரோப்பா முழுவதுமுள்ள அப்பாவி சிரிய அகதிகளின் நிலை
கேள்விக்குறியாகியுள்ளது. ஆங்காங்கே அகதிகள் மீதான தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்து
விட்டன. ஐரோப்பிய நாடுகளும் இவர்களை வெளியேற்றவே முயல்கின்றனர். டென்மார்க்
நாட்டில் அகதிகளுக்கான செலவை ஈடுகட்ட அவர்களிடமுள்ள நகை, பணத்தை பறிமுதல் செய்ய சட்டமே இயற்றிவிட்டனர்.
|
அகதிகளுக்கு உதவப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்டதாக ஏஞ்சலா மெர்கலை கேலி செய்யும் சித்திரம் |
பணமுள்ளவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா, கனடா வரை செல்ல, அதை விட பெருமடங்கு (90%,)அகதிகளுக்கு புகலிடம்
அளித்துள்ள துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் போன்ற சிரியாவின் அண்டை நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக இது ஒரு பெரும்சுமை. பணக்கார முஸ்லிம் நாடுகளோ சிரிய மக்களை
மொத்தமாக புறக்கணித்து விட்டன.
தற்போது உள்ள நிலைமையில் அஸாத் பதவி
விலகினாலும் மீண்டும் சிரியாவில் பழைய நிலைமை திரும்ப வாய்ப்புகள் மிக குறைவே.
2012-ம் ஆண்டிலேயே சமாதான
பேச்சுவார்த்தையின் முலம் அஸாத்தை பதவி விலக செய்யலாம் என்ற ரஷ்யர்களின் யோசனையை அமெரிக்கா, சவூதி மற்றபிற மேற்கத்திய நாடுகள் (அஸாத்தை எப்படியும் விழ்த்திவிடலாம்
என்ற திட்டத்தில்) புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டு உண்டு.
ஆனால் கொலைகார அஸாத் விட்டுசெல்லும்
வெற்றிடத்தை நிரப்ப யாருமில்லை என்பதுடன் சின்னாபின்னமாகியுள்ள நாட்டில் பயங்கரவாத
அமைப்புகள் வலுப்பெற்று எஞ்சியுள்ள மக்களையும் அழித்து விடுவர். மேற்கில் மொராக்கோ
தொடங்கி கிழக்கில் பங்களாதேஷ் வரை பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் மக்களாட்சி
என்பது பெயரளவில் தான். துனிஷியா இதில் விதிவிலக்கு, புரட்சிக்கு
பின் பெரும் அச்சுறுத்தல்களுக்கிடையே ஓரளவு அங்கு ஜனநாயகம் நிலவுகிறது.
ரஷ்ய ஆதரவு
பெற்ற இரான், இராக், ஹிஸ்புல்லா
(Shia) VS அமெரிக்க ஆதரவு சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் போன்ற இன்ன பிற (Sunni) நாடுகளுக்கு
இது ஒரு கவுரவப்பிரச்சனை, கிட்டத்தட்ட இந்த மத்திய
கிழக்கு நாடுகளின் எதிர்கால அரசியல் இருப்பே இதில்தான் அடங்கியுள்ளது.
இதற்கிடையில் ஐஎஸ் கும்பல்…! யாரும் அவ்வளவு எளிதில்
விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஐநா பிரச்சனையில் சம்பந்தப்பட்ட
((அமெரிக்கா, அரபு கூட்டமைப்பு, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மற்ற பிற அண்டை நாடுகள் மற்றும் மிதவாத..! சிரிய விடுதலை இராணுவம்))
நாடுகளை ஒன்றினைத்து பேச்சுவார்த்தைக்கு தேதி குறிக்க, ஷியா
மதகுரு மரணத்தால் அதிகமாகியுள்ள சவூதி – இரான் மோதல் போக்கு இந்தப் பேச்சுவார்த்தையை குலைத்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இது போக துருக்கி, இராக் மற்றும் சிரியாவில் பரவியுள்ள குர்து முஸ்லிம் இனத்தவரையும்
பேச்சுவார்த்தையில் சேர்க்க ரஷ்யா விடுத்த கோரிக்கையை துருக்கி கடுமையாக
எதிர்க்கிறது. குர்துகள் தனி நாடு கேட்டு ஆயுதமேந்தி துருக்கி ராணுவம் மற்றும்
ஐஎஸ் இருதரப்பினரையும் எதிர்த்து போரிடுகின்றனர்.
பெரும்பாலும் இந்த வருடத்தில்
ஆசாத்தின் நிலை என்னவாகக்கூடும் என்று தெரிந்து விடும்.
பதிவின் எளிமை கருதி சிரியாவில்
சண்டையிடும் குர்து, Yazidi, Turkmen போன்ற
இனக்குழுக்களின் நிலைப்பாடு, உலகம் முழுவதும்
தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்யும் சவூதி வஹாபிசம், அதற்கு
துணைபோகும் அமெரிக்கா, உட்புசல்களால் ஆட்டம் காணும் சவூதி மன்னராட்சி, யூத ஆக்ரமிப்பு நாடான இஸ்ரேல், ஹிஸ்புல்லா
அமைப்பு, அணுகுண்டை அடைய முயற்சிக்கும் இஸ்லாமிய குழுக்கள், யேமெனில் சவூதி நிகழ்த்தும் கொலைவெறித் தாக்குதல்கள்
போன்ற விஷயங்களை தவிர்த்துவிட்டேன். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
இஸ்லாம் அமைதி, சகோதரத்துவம், கொடை போன்றவற்றை வலியுறுத்தும்
மதம் என்று எந்தப் புத்தகத்தை மேற்கொள் காட்டுகிறார்களோ
அதே புத்தகத்தைதான் தீவிரவாதிகளும் மேற்கோள் காட்டுகின்றனர்.
கிறிஸ்தவ, ஹிந்து, யூத மதத்தினர் புனிதமாகக் கருதும்
நூல்களின் நிலையும் இதுதான் எனும்போது, நடப்பவைகளைக் கண்டு முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வளர்த்துக் கொள்வது வீண்.
இதையெல்லாம் மீறி அமைதியை
விரும்பும் 99 சதவித மக்களுடன்தான் நாம்
வாழ்கிறோம்.
மனிதர்களின் அடங்கா
வன்முறைகளுக்கும், அரசியல் நோக்கங்களுக்கும் மதம் ஒரு சாக்கு.
மேற்சொன்ன எதுவுமே மேலோட்டமாக இரண்டு பதிவுகளின்
முலம் பேசிவிடக்கூடிய நிகழ்வுகள் இல்லை, ஆனால்
பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துகொள்ள இப்பதிவு
உதவக்கூடும்.